ஈரோட்டில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்கள்
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், வில்லரசம்பட்டி நால் ரோடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு சின்ன சேமூர் வசந்தம் நகரை சேர்ந்த சரவணன் (வயது 42) என்பதும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 16¾ கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரும், அவரது நண்பருமான மரப்பாலம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரும், ஈரோட்டில் உள்ள கடைகளுக்கு புகையிலை பொருட்களை வீட்டில் இருப்பு வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரவணன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 250 மதிப்பிலான 290½ கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஈரோடு அசோகபுரம் தீரன் சின்னமலை வீதியை சேர்ந்த சூர்யா (24) மற்றும் கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதியை சேர்ந்த திருப்பதி (32) என்பவரையும் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பீடா கடைக்கு சீல்
ஈரோடு மாதவகிருஷ்ண வீதியில் டவுன் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு பீடா கடையில் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளரான ஈரோடு மோசிக்கீரனார் வீதியை சேர்ந்த சீதாராம் ராய் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரத்து 880 மதிப்பிலான 2½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவருக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சர்வன்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சம்மந்தப்பட்ட பீடா கடைக்கு ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story