4-வது ஆண்டாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது- மதகுகள் வழியாக உபரிநீர் ெவளியேற்றம்


4-வது ஆண்டாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம்  100 அடியை எட்டியது- மதகுகள் வழியாக உபரிநீர் ெவளியேற்றம்
x
தினத்தந்தி 26 July 2021 2:43 AM IST (Updated: 26 July 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. கீழ் மதகுகள் வழியாக உபரிநீர் ெவளியேற்றப்படுகிறது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது.  கீழ் மதகுகள் வழியாக உபரிநீர் ெவளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீ தூரத்தில் பவானி ஆறும் மோயாறும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு. பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 
இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் நீர் வரத்து ஆதாரங்களாக உள்ளது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீரும் 
இதே அணை நிரம்பிய பின் திறக்கப்படும் உபரி நீரும் பவானி ஆற்றின் மூலம் பவானிசாகர் அணையில் கலக்கிறது. 
கடந்த ஒரு மாதமாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
100 அடியை எட்டியது
இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. 
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி மாலை 4 மணிக்கும், 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி காலை 6 மணிக்கும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி இரவு 10 மணிக்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
உபரி நீர் திறப்பு
பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறையில் வகுக்கப்பட்ட விதியின் படி ஜூலை மாதம் 31-ந் தேதி வரை அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதும் உபரி நீர் திறக்க வேண்டும். ஆகஸ்டு 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 102 அடிவரையிலும், அக்டோபர் முதல் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்படுகிறது. 
இதன்படி நேற்று மாலை 4.15 மணிக்கு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் 9 கீழ் மதகுகள் மூலம் உபரி நீராக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாமோதரன் திறந்து வைத்தார். உதவி செயற்பொறியாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். அணைப்பிரிவு உதவி பொறியாளர்கள் சிங்காரவேலன், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை 4.15 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,650 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரி நீராக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. 
திறக்கப்படும் உபரி தண்ணீர் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் போது பவானி ஆற்றின் மேல் மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 More update

Next Story