அந்தியூர், பவானியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த; 8 மளிகை கடைகளுக்கு சீல்; 11 பேர் கைது
அந்தியூர், பவானியில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 8 மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
அந்தியூர், பவானியில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 8 மளிகை கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 மளிகை கடைகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுபாளையம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்திலுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வருவாய்த்துறை அதிகாரி உமா, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
6 பேர் கைது
அதனை தொடர்ந்து அதிகாரிகள் கடைகளில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘அவர்கள் பழைய மேட்டூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 61), தவுட்டுப்பாளையம் அண்ணா சாலை பகுதியை சேர்ந்த குணசேகரன் (57), தாசரியூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (39), தவுட்டுப்பாளையம் இந்திரா வீதி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (41), பழைய பகுதியை சேர்ந்த சக்திவேல் (52), நேதாஜி வீதி பகுதியைச் சேர்ந்த இளங்கோ (41) என்பதும், இவர்கள் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடைகளில் பதுக்கி வைத்திருந்ததும்’ தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 மளிகை கடைகளையும் பூட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவானி
இதேபோல் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் பவானி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 5 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
2 கிலோ பறிமுதல்
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘அவர்கள் பவானியை அடுத்த ஜம்பை பகுதியை சேர்ந்த கடை வியாபாரி முத்துக்கனி (45), பவானி அடுத்த காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த துரைசிங்கம் அற்புதராஜ் (42), அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (55), குட்ட முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (55), சித்தார் பகுதியை சேர்ந்த முனியப்பன் (43) என்பதும், இவர்கள் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும்’ தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து 5 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story