காசிமேடு மற்றும் எண்ணூரில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி


காசிமேடு மற்றும் எண்ணூரில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 July 2021 4:30 AM GMT (Updated: 26 July 2021 4:30 AM GMT)

காசிமேடு மற்றும் எண்ணூரில் நண்பர்களுடன் கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு சி.ஜி.காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 18). இவர், தன்னுடைய நண்பர்களான மணிகண்டன் (17), உதயா (17), பிரகாஷ் (24), கார்த்திக் (19), முருகா (18) தமிழ்ச்செல்வன் (16) ஆகிய 6 பேருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பைபர் படகுகள் நிறுத்தம் அருகில் கடலில் குளித்தார்.

அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கி விக்னேஷ் மாயமானார். அருகில் குளித்து கொண்டு இருந்த நண்பர்கள் 6 பேரும் இதை பார்த்து கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் விக்னேஷ் கடலில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் 6 பேரும் கரை திரும்பி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மெரினாவில் இருந்து 5 சிறப்பு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 4 மணிநேரம் போராடி, அதே பகுதியில் விக்னேசை பிணமாக மீட்டனர்.

ராட்சத அலையில் சிக்கிய அவர், நீரில் மூழ்கி பலியாகி விட்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர் பலி

அதேபோல் சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் (17). இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளார்.

இவர், கல்லூரி மாணவரான அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நந்தகுமார் (20) என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கடற்கரைக்கு வந்தார்.

பின்னர் நண்பர்கள் 2 பேரும் கடலில் குளித்தனர். அப்போது எட்வின், ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் கூறினார்.

உடனடியாக அவர்கள், கடலுக்குள் குதித்து நீரில் தத்தளித்த எட்வினை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் எட்வின் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story