வண்டலூர்-கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பால பணிகளை அக்டோபருக்குள் முடிக்க வேண்டும்


வண்டலூர்-கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பால பணிகளை அக்டோபருக்குள் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 July 2021 4:45 AM GMT (Updated: 26 July 2021 4:45 AM GMT)

வண்டலூர்-கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையில் நடக்கும் சாலை மேம்பாலப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

வண்டலூர்,

சாலை விபத்துகளைத் தடுக்க, சாலைகளில் எச்சரிக்கை பலகைகள், வேக அளவுப் பலகைகள், ஒழுங்குமுறைப் பலகைகள் போன்ற பாதுகாப்புச் சாதனங்கள் சர்வதேசத் தரத்துடன் பொருத்தப்படவேண்டும்.

இந்த நோக்கத்தில் அதுபோன்ற உபகரணங்கள் தயாரிக்கும் ஒரகடம் எஸ்.பி.ஏ. இன்ப்ராஸ்டெக் தொழிற்சாலையை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம், அனைத்து உபகரணங்களும் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் தயாரிக்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேம்பால கட்டுமானம்

வண்டலூர்-கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையில் 36-ம் எண் ரெயில்வே கடவுக்கு மாற்றாக, சாலை மேம்பாலம் கட்டும் பணிகள் குறித்தும் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ரெயில்வே மேம்பாலம் ரூ.37.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இக்கடவுக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள சாலையின் நீளம் குறைவாக உள்ளதால், பாலத்தின் அணுகுசாலை தடுப்புச்சுவர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

அக்டோபர் மாதத்துக்குள்...

இந்த மேம்பாலப் பணிகள், மேல்தளப் பணிகள் மற்றும் ஓட்டேரிப் பக்கம் உள்ள பணிகள் முடிவடைந்துள்ளன. வண்டலூர்-கூடுவாஞ்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையில் சாலை மேம்பாலம் கட்டும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருவதாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அணுகுசாலை பணிகள் நடைபெற்றுவருவதை அமைச்சர் பார்வையிட்டார்.

இப்பணிகளை துரிதப்படுத்தி, வரும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

போக்குவரத்து எளிதாகும்

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எ.வ.வேலு கூறியதாவது:-

இந்த ரெயில்வே பாலப் பணி முடிந்துவிட்டால், தற்போது புதிதாக கட்டப்பட்டுவரும் ஊரப்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்துக்கு காஞ்சீபுரம் மார்க்கமாக வரும் பஸ்கள் வந்துசெல்ல எளிதாக இருக்கும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை ஆய்வு செய்து புதிய பாலங்கள் கட்டப்படும். மழைக்காலம் தொடங்க இருப்பதால் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வெள்ளநீர் வடிகால் முகப்புகளில் அடைப்பு நீக்கி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story