திருவாரூரில், வீதிகள் தோறும் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. அறிவிப்பு


திருவாரூரில், வீதிகள் தோறும் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. அறிவிப்பு
x
தினத்தந்தி 26 July 2021 4:13 PM GMT (Updated: 26 July 2021 4:13 PM GMT)

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து திருவாரூரில் வீதிகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. அறிவித்து உள்ளார்.

கொரடாச்சேரி,

திருவாரூரில் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் டாக்டர் கோபால், நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட நிர்வாகிகள் பாப்பாத்திமணி, பன்னீர்செல்வம், முகமதுஅசரப், பொன்.வாசுகிராமன், கலியபெருமாள், சம்பத், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், பாஸ்கர், தமிழ்ச்செல்வன், அன்பழகன், சிங்காரவேல், நகர செயலாளர்கள் மூர்த்தி, குமார், ஒன்றியக்குழு தலைவர்கள் மன்னார்குடி மனோகரன், குடவாசல் கிளாரா செந்தில், நன்னிலம் விஜயலட்சுமி, வலங்கைமான் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. ஆனால் தற்போது தி.மு.க.வின் ஆட்சியில் மக்கள் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு தேவையான உரம் கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. இதில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறந்து விட்டால் மட்டும் போதும் என்று தி.மு.க. அரசு நினைத்து விட்டது. தற்போது தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது. தேவையான தண்ணீரை பெற்றுத்தர வேண்டிய தி.மு.க. அரசு, கொரோனா பேரிடரை காரணம் காட்டி நழுவி வருகிறது.

அதே நேரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டும் தி.மு.க. அரசு ஆர்வம் காட்டுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகிற 28-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வீதிகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வீதிக்கு மூன்று இடம் என பிரித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story