அந்தியூர் அருகே தோட்டத்தில் குட்டிகளுடன் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு- வனப்பகுதியில் விடப்பட்டது
அந்தியூர் அருகே தோட்டத்தில் குட்டிகளுடன் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு- வனப்பகுதியில் விடப்பட்டது
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 45). இவர் தனது வீடு அருகே உள்ள தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான குட்டிகளுடன் பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். அவை மலைப்பாம்புகளாக இருக்கும் என்று நினைத்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு வந்து குட்டிகளுடன் கிடந்த அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பெரிய டிரம்மில் போட்டுள்ளனர். பின்னர் சந்திரமோகன் அந்த டிரம்மை வீட்டுக்கு கொண்டு வந்து பாம்புகளுக்கு உணவாக தவளையும் பிடித்து உள்ளே போட்டுள்ளார். இரவு முழுவதும் தனது வீட்டிலேயே வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை இதுபற்றி அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் உத்தரசாமி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அது அதிக விஷத்தன்மை உடைய கண்ணாடி விரியன் பாம்பு என்றும், 5 அடி நீளமுடையது என்பதும், அது 40-க்கும் மேற்பட்ட குட்டிகளை போட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அந்த பாம்புகளை பிடித்து அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story