பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு


பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 27 July 2021 4:10 AM IST (Updated: 27 July 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
100 அடியை எட்டியது
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு பவானி ஆறு மற்றும் மோயாற்றின் மூலம் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. இதனால் நேற்று முன்தினம் 4.15 மணி அளவில் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி தண்ணீராக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
உபரிநீர் அதிகரிப்பு
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 844 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 931 கன அடி தண்ணீர் வந்தது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிட்டால் கீழ்பவானி பகுதி பாசன விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவார்கள். தற்போது கீழ்பவானி பாசன பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், எனவே கீழ்பவானி வாய்க்காலில் உபரி தண்ணீர் திறக்க வேண்டும் என சத்தியமங்கலம் செண்பகபுதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story