வாழ்வாதாரத்தை காக்கக்கோரி மேளதாளம், நாதஸ்வரம் இசைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
வாழ்வாதாரத்தை காக்கக்கோரி மேளதாளம், நாதஸ்வரம் இசைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஈரோடு
வாழ்வாதாரத்தை காக்கக்கோரி மேளதாளம், நாதஸ்வரம் இசைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நாதஸ்வரம், மேளதாளங்கள்
தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மேளதாளம், நாதஸ்வரம் இசைத்து, தங்கள் வாழ்வாதாரத்தை காக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
தமிழகம் முழுவதும் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் பதிவு செய்யாத 3 லட்சம் கலைஞர்களும் உள்ளனர். கோவில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நாங்கள் இசை வாத்தியங்களை வாசித்து பிழைப்பு நடத்தி வந்தோம். கொரோனா ஊரடங்கால், கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு கொரோனா நிவாரணம், நலவாரியம் மூலம் வழங்கினர். இந்த ஆண்டு வழங்கவில்லை.
நாட்டுப்புற கலைஞர்கள்
தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கி, அனைத்து பணிகளும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. எனவே, எங்களுக்கும் வாய்ப்பளித்து, அனைத்து கோவில்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வாசிக்க அனுமதி வழங்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் நாடகம், நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.
தமிழக அரசு வழங்கும் மாவட்ட விருது, ஒவ்வொரு கலைக்கும் 10 கலைஞர்களுக்கு வழங்க வேண்டும். இலவசமாக கருவிகள் மாவட்டத்தில், 50 கலைஞர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்டல கலை பண்பாட்டுத்துறை அலுவலகம், நாதஸ்வரம், தவில் இசை பயில இசைப்பள்ளி அமைக்க வேண்டும். அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் நாட்டுப்புற கலைஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story