ஈரோட்டில் சரக்கு வேன் மோதி மளிகை கடை உரிமையாளர் சாவு


ஈரோட்டில் சரக்கு வேன் மோதி மளிகை கடை உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 26 July 2021 10:54 PM GMT (Updated: 26 July 2021 10:54 PM GMT)

ஈரோட்டில், சரக்கு வேன் மோதி மளிகை கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

ஈரோடு
ஈரோட்டில், சரக்கு வேன் மோதி மளிகை கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். 
மளிகை கடை உரிமையாளர்
ஈரோடு குமலன்குட்டை டவர் லைன் காலனி சரோஜினி நகர் பகுதியை சேர்ந்தவர் வைகுண்ட ராஜா (வயது 56). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். வைகுண்ட ராஜா நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக அவரது இரு சக்கர வாகனத்தில் சம்பத் நகர் உழவர் சந்தை அருகே நசியனூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்கு ரோட்டோரம் தக்காளி விற்பனை செய்யும் வியாபாரியிடம் இரு சக்கர வாகனத்தில் இருந்தபடியே விலை கேட்டுள்ளார். அப்போது, நசியனூர் ரோட்டில் இருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் கொரியர் வேன் எதிர்பாராதவிதமாக வைகுண்ட ராஜா இரு சக்கர வாகனத்தில் மோதியது.
சாவு
இதில் படுகாயம் அடைந்த வைகுண்ட ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வைகுண்ட ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கொரியர் வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Next Story