ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில வாலிபர் அடித்து கொன்று உடல் புதைப்பு 4 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில வாலிபர் அடித்து கொன்று உடல் புதைப்பு 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 11:15 AM IST (Updated: 27 July 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் விபசாரத்தில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை அடித்து கொன்று உடலை புதைத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் இஸ்ரேல் சாகா (வயது 34). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் மாயமானதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவரது சகோதரர் இஸ்மாயில் கடந்த 24-ந்தேதி காவேரிபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்ரேல் சாகாவின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை செய்தனர். அதில் அவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த குருதேவிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு காவேரிபாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அடித்து கொலை

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் அங்கிருந்த குருதேவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த 24-ந்தேதி குருதேவ் தனது நண்பர்களுடன் சேர்ந்து இஸ்ரேல் சாகாவை கொலை செய்து மேவலூர் குப்பம் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் அருகே புதைத்தது தெரிய வந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திப்பு (47) என்பவர் காஞ்சீபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் பகுதியில் வீடு ஒன்றில் உள்ளூர் நபர்கள் துணையுடன் வடமாநில பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்துள்ளார்.

இவரிடம் இஸ்ரேல் சாகா தனக்கு தெரிந்த பெண்ணை அறிமுகம் செய்துவிட்டு, அதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது திப்புவுக்கும், இஸ்ரேல் சாகாவுக்கும் இடையே ஏற்பட்ட பணத்தகராறில் அங்கு இருந்த திப்பு, அஜித்குமார் (23) ஜெயக்குமார்(24), ரஞ்சித்(26), குருதேவ்(22) ஆகிய 5 பேர் இஸ்ரேல் சாகாவை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர்.

4 பேர் கைது

பின்னர் மேவலுர்குப்பம் அருகே கிருஷ்ணா கால்வாய் அருகில் புதைத்து விட்டு தப்பி ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், ரஞ்சித், ஜெயக்குமார், குருதேவ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் போலீசார் இஸ்ரேல் சாகாவின் உடலை தோண்டி எடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர்களை வரவழைத்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தலைமறைவாக உள்ள திப்புவை போலீசார் தேடி வருகின்றனர்.
1 More update

Next Story