வைக்கோல் கட்டும் எந்திரங்கள் வாங்குவதற்கான மானியத்தை 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்


வைக்கோல் கட்டும் எந்திரங்கள் வாங்குவதற்கான மானியத்தை 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 July 2021 2:49 PM GMT (Updated: 27 July 2021 2:49 PM GMT)

வைக்கோல் கட்டும் எந்திரங்கள் வாங்குவதற்கான மானியத்தை 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரடாச்சேரி,

நெல் சாகுபடியில் அறுவடை முடிந்த பிறகு நெல்மணிகளை சேகரித்த பின் மீதி உள்ள வைக்கோல்கள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்பட்டு வந்தது. கூடுதலாக உள்ள வைக்கோல் மூலம் பேப்பர் தயாரிக்கும் தொழிலும் நடைபெற்று வந்தது. மாட்டு தீவனத்தில் வைக்கோல் பெரும்பங்காற்றி வருகிறது. விவசாயிகள் வைக்கோலை திரட்டி தங்கள் வீட்டு பின்புறம் வைக்கோல் போர்களாக சேகரித்து, தேவைப்படும்போது மாடுகளுக்கு உணவாக கொடுத்து வந்தனர்.

சமீபகாலமாக விவசாய தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வைக்கோல் சேகரிக்கும் பணி பாதிப்படைந்தது. எந்திரங்களைக் கொண்டு நெல் அறுவடை செய்தது போது மீதி உள்ள வைக்கோல்கள் வயல்வெளிகளில் கிடத்தப்பட்டு வந்தன. இந்த வைக்கோல்களை சேகரிக்க தொழிலாளர்கள் இல்லாததால் பாதிக்கும் மேற்பட்ட வைக்கோல்கள் வயலிலேயே கிடந்து வீணாகின. இதனால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதை தடுக்கும் வகையில் சமீப காலமாக வந்துள்ள வைக்கோல் கட்டும் எந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இதன் மூலம் சேதாரமின்றி வைக்கோல்களை கட்டுகளாக கட்ட முடிகிறது. இந்த எந்திரங்கள் மூலம் சேதமின்றி வைக்கோல்கள் மிக நேர்த்தியாக கட்டுகளாக கட்டப்படுகிறது. இதனால் விவசாயிகளிடம் இந்த வைக்கோல் கட்டும் எந்திரத்துக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேவையான வைக்கோல் கட்டும் எந்திரம் இல்லாததால் விவசாயிகள் முழுமையாக அதன் பலனை அடைய முடியவில்லை.

தற்போது இந்த எந்திரங்கள் வாங்க 40 சதவீதம் வரை அரசு மானியத்தை வழங்கி வருகிறது. விவசாயிகள் இந்த எந்திரத்தை கூடுதலாக பயன்படுத்த உதவும் வகையில் இதற்கான மானியத்தை 75 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். வைக்கோல் கட்டும் எந்திரம் வாங்க அனைத்து வங்கிகளிலும் நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story