அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து
சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட தீபத்தால் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
சேத்தியாத்தோப்பு.
சேத்தியாத்தோப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று வழக்கம்போல், சுகாதார ஆய்வாளர், மருந்தாளுனர், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். ஆனால் நோயாளிகள் யாரும் இல்லை.
இந்த நிலையில் மாலை 5 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் பின்புறம் உள்ள மோட்டார் அறையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அறை தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் கிருமி நாசினி பவுடர் எரிந்து நாசமானதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story