கொரோனா-கருப்புபூஞ்சை நோயில் இருந்து மீண்ட பின்பும் மனவேதனையில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை


கொரோனா-கருப்புபூஞ்சை நோயில் இருந்து மீண்ட பின்பும் மனவேதனையில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 July 2021 10:38 PM GMT (Updated: 27 July 2021 10:38 PM GMT)

கொரோனா-கருப்புபூஞ்சை நோயில் இருந்து மீண்ட பின்னும் மனவேதனையில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு
கொரோனா-கருப்புபூஞ்சை நோயில் இருந்து மீண்ட பின்னும் மனவேதனையில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆலம்பாளையம் கே.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் என்கிற பவுல் காந்தி. லேப்டெக்னீசியன். இவருடைய மனைவி யமுனா (வயது 43). இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் யமுனாவுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கியது. இதனால் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 10 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
கருப்பு பூஞ்சை நோய்
கடந்த மாதம் 28-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் குணமடைந்து நேற்று முன்தினமே வீடு திரும்பினார். இதற்கிடையில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியதில் மிகுந்த மனவேதனையில் இருந்த யமுனா வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதனால் அவர் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியேறி காவிரி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட யமுனா தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
உறவினர்கள் சோகம்
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று யமுனாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோயில் இருந்து குணம் அடைந்தவர் மனவேதனையில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story