மொபட் மீது வேன் மோதல்: கணவன் கண் எதிரே மனைவி பலி
கோபி அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி பரிதாபமாக பலியானார்.
கடத்தூர்
கோபி அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி பரிதாபமாக பலியானார்.
தொழிலாளி
கோபி அருகே உள்ள கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மனோன்மணி. இவர்களுக்கு சஞ்சய் என்ற 1½ வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மொபட்டில் கோபிக்கு வந்து உள்ளார். பின்னர் ஓட்டல் ஒன்றில் உணவு வாங்கிக்கொண்டு மொபட்டில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். குள்ளம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது பின்னால் தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் தொழிற்சாலை வேன் ஒன்று மொபட்டின் மீது மோதியது.
சாவு
இந்த விபத்தில் மொபட்டில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். இதில் கணேசனின் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் மனோன்மணி பரிதாபமாக இறந்தார்.
விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று காயம் அடைந்த கணேசன் மற்றும் குழந்தை சஞ்சையை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்
கல்வீசி தாக்குதல்
இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து விபத்தை ஏற்படுத்திய வேனின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் வேனின் கண்ணாடிகள் நொறுங்கின. இந்த சம்பவத்தில் வேனில் இருந்த தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோன்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story