இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: வரும் சந்ததிகள் வளமாய் வாழ காடுகளை காப்போம்


இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: வரும் சந்ததிகள் வளமாய் வாழ காடுகளை காப்போம்
x
தினத்தந்தி 28 July 2021 4:10 AM IST (Updated: 28 July 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: வரும் சந்ததிகள் வளமாய் வாழ காடுகளை காப்போம்

பவானிசாகர்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று உலக இயற்கை பாதுகாப்பு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று நோயால் கொண்டுவரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார ரீதியான வீழ்ச்சியை நாம் அனைவரும் புரிந்து கொண்டுள்ளோம். இந்தநிலையில் நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த நாளில் மட்டுமல்லாமல் தினமும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, பிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர், நிலம், ஆகாயம், வாயு என நான்கும் மாசடைந்துவிட்டன. விரைவில் வாழ முடியாத இடமாக பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது. வனங்கள் அழிந்து, நதிகள் வறண்டு, மலைகள் மறைந்து, கடல் நீர் உயர்ந்துபோன நிலையில், இனி எத்தனை தலைமுறைகள் இந்த பூமியைப் பார்க்குமோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணுயிர்கள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள், மண் வளம், மேகங்கள், ஏன் ஒவ்வொரு மழைத்துளியும்கூட இயற்கையின் கொடைதான். இதில், ஒன்றை இழந்தாலும் மனித குலம் வாழவே முடியாது. 
வன ஆராய்ச்சியாளர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் வனப்பகுதி மட்டுமல்லாது பல வனப்பகுதிகளில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வரும் இயற்கை வன ஆராய்ச்சியாளர் டாக்டர் என்.கே.ராம்சுரேந்தர் கூறியதாவது:-
இயற்கை மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க கீழ்க்கண்ட திட்டங்களை நமது அரசு செயல்படுத்தி வருகிறது. வனவிலங்குகளின் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி பற்றிய அனைத்து தகவல்களையும் கணக்கெடுத்து சேகரித்தல்.
வாழ்விடங்களை பாதுகாத்தல் மற்றும் வளம் ஆக்குதல். இயற்கை வாழ்விடங்களின் பகுதிகளை கண்டறிதல். இயற்கை ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தல். வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கும் கைப்பற்றுவதற்கும் முழுமையான கட்டுப்பாடு விதித்தல். வனவிலங்குகளில் இருந்து பறிக்கப்படும் தந்தங்கள், கொம்புகள், தோல்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்தல். மீறி இந்த இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குதல். எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள உயிரினங்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தல். இவ்வாறு வனவிலங்குகளை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன. 
நீர்வளம்
ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒரு பங்கு காடாக இருக்க வேண்டும் என்பது நெறிமுறை. காட்டிற்கும், ஒரு மாநிலத்தில் கிடைக்கும் தண்ணீர் அளவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகாரில் காடுகளின் பரப்பளவு குறைவு என்றாலும், அம்மாநிலங்களின் வழியாக ஓடும் கங்கை இமயமலையில் உற்பத்தியாவதால், பெருமளவு நீரை கொண்டு வந்து, மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுத்தி, நீர்வளத்தை தருகிறது.  நிலப்பரப்பில் 33.33 சதவீதம் காடுகள் இருந்தால், ஒரு நாட்டில் விவசாய வளம் பெருகும். தமிழகத்தில் 17.41 சதவீத காடுகள் உள்ளன. தற்போது உள்ளதுபோல், இன்னும் ஒருமடங்கு காடு பெருகினால் நீர் வளம் பெருகும். 
காப்போம்
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட்டு தன் சந்ததிக்கு விட்டு செல்ல வேண்டும். மரம் நடுவதையும் வளர்ப்பதையும் கடமை என கொள்ள வேண்டும். ஒரு மரத்தை மிகவும் அவசியம் எனக்கருதி வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும். நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.  இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட வகை காட்டு விலங்குகள், 2,100 வகையான பறவைகள், 20 ஆயிரம் வகையாக ஊர்வன மற்றும் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த எண்ணிக்கை இருக்குமோ? குறையுமோ?  என்பது நம் கையில் தான் உள்ளது. காடுகளை அழித்தால், அழிவது விலங்கினங்கள் மட்டுமல்ல. மனிதகுலமும்தான். உலகம் நிைலபெறுவது காடுகளின் வளத்தில் உள்ளது. காடுகள் நிலைபெறுவதும் நம் கையில் உள்ளது. வரும் சந்ததிகள் வளமாய் வாழ காடுகளை காப்போம். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story