சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 July 2021 8:42 PM IST (Updated: 28 July 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்கக்கோரி ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்கக்கோரி ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
அந்தியூர் அருகே ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று பகல் 11 மணி அளவில் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய ரூ.65 கோடி நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகம் உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டு போராட்டம் பற்றி விளக்கிக் கூறினர்.
நிலுவைத்தொகை
அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், பவானி, கவுந்தப்பாடி, கோபி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபற்றி அறிந்ததும் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் சர்க்கரை ஆலை பொது மேலாளர் திருவேங்கடம் ஆகியோர் அங்கு சென்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சர்க்கரை ஆலை நிர்வாகிகள் கூறும்போது, ‘இந்த மாத இறுதிக்குள் ரூ.5 கோடியும், அடுத்த மாதம் இறுதிக்குள் ரூ.5 கோடியும் என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நிலுவைத்தொகை வழங்கி முடிக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி ஆப்பக்கூடல் மற்றும் பவானி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story