இன்று உலக புலிகள் தினம்: புலிகளின் சாம்ராஜ்யமான சத்தியமங்கலம் சந்தன காடு...


இன்று உலக புலிகள் தினம்: புலிகளின் சாம்ராஜ்யமான சத்தியமங்கலம் சந்தன காடு...
x
தினத்தந்தி 29 July 2021 2:01 AM IST (Updated: 29 July 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

இன்று உலக புலிகள் தினம். சத்தியமங்கலம் சந்தன காடு புலிகளின் சாம்ராஜ்யமாக உள்ளது,

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ந்தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் அமைதியாக வாழும் சுபாவம் கொண்டவை புலிகள். ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல் ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது இயற்கையின் அதிசயம். புலிகளைப் பொறுத்தவரை பசித்தால் மட்டும் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை. புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாகும். பொதுவாக வனப்பகுதிக்குள் வசிக்கும் புலிகள் ஒவ்வொன்றும் தனக்குத்தானே எல்லைகள் அமைத்து வாழும் பழக்கம் கொண்டவை.
51 புலிகள் காப்பகங்கள்
இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளன. சத்தியமங்கலம் வனப்பகுதி 42-வது புலிகள் காப்பகமாக விளங்குகிறது. கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இதன் பரப்பளவு 1,455 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2019-2020 ஆம் ஆண்டு வனத்துறை கணக்கெடுப்புப்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, தலமலை, ஜீர்கள்ளி, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மொத்தம் 87 புலிகள் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பருவமழை சீராக பெய்து வருவதால் இங்கு ஏராளமான மான்கள் உள்ளன. இதனால் புலிகளின் சாம்ராஜ்யமான சத்தியமங்கலம் சந்தன காட்டில் புலிகள் வளமாக வசித்து வருகின்றன. 
பயமின்றி வாழும்
புலிகள் வசிக்கும் காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்கள் செல்ல அச்சப்படுவதால் மற்ற வன விலங்குகள் எவ்வித பயமுமின்றி வனப்பகுதியில் உள்ள உணவுகளை உண்டு, குளம்-குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து விட்டு சுகமாக வசித்து வருகிறது.
இந்தியாவின் சிறந்த புலிகள் காப்பகத்திற்கான மேலாண்மை விருதினை 2018-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு வழங்கினார். மழை, வெயில் காலத்தில் நாம் எப்படி ஒரு குடையின் கீழ் பாதுகாப்பாக இருக்கிறோமோ அதுபோல் புலிகளை காப்பாற்றினால் அதற்கு கீழ் உள்ள அனைத்து வன விலங்குகளையும் காப்பாற்றுவதாக அமையும் என்பது வனத்துறையினரின் தாரக மந்திரமாகும். எனவே புலிகளை காப்பது வனத்துறையின் கடமை மட்டுமன்று, நாம் ஒவ்வொருவரின் பங்கும் அதில் இருக்க வேண்டும். 

Related Tags :
Next Story