‘மாணவர்களின் தற்கொலைக்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல’ அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்


‘மாணவர்களின் தற்கொலைக்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல’ அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
x
தினத்தந்தி 29 July 2021 7:45 AM IST (Updated: 29 July 2021 7:45 AM IST)
t-max-icont-min-icon

தேர்வை எதிர்கொள்வது அவர்களின் பொறுப்பு: ‘மாணவர்களின் தற்கொலைக்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல’ அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.

சென்னை,

கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு முடிவுகள் சில மாணவர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டன. ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து அரசு அதற்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டு, அந்த தேர்வும் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

இதற்கிடையில், அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஊழியர் சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி உயர்கல்வித் துறைக்கு இதுதொடர்பாக மின்னஞ்சலில் புகார் அனுப்பியது. அதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடுமையான நோய்த்தொற்று சூழல் நிலவும் இந்த நேரத்தில், ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆன்லைன் தேர்வு நடைமுறை இந்த துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசித்த பிறகுதான் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, இந்த வகையான தேர்வு முறையில் குறைபாடுகள் இருப்பதாக கூறுவது தவறு.

தேர்வை எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் எதிர்கொள்வது அவர்களுடைய பொறுப்பு ஆகும். மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு பல்கலைக்கழகம் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்தில்கொண்டு, மறுதேர்வு நடத்த பல்கலைக்கழகத்துக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, தேர்வு முடிவு, மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பியவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story