மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்' விருது + "||" + 'Thakaisal Tamilar' award for Marxist Communist senior leader N. Sankarayya

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்' விருது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்' விருது
‘தகைசால் தமிழர்' விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் என்.சங்கரய்யாவுக்கு விருதை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
சென்னை,

தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்' என்ற பெயரில் விருது வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே ‘தகைசால் தமிழர்' விருதுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இதன் மூலம் ‘தகைசால் தமிழர்' விருதினை பெரும் முதல் நபர் என்ற பெருமையை என்.சங்கரய்யா பெற்றுள்ளார்.

என்.சங்கரய்யா தேர்வு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்திடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார். இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் நடந்தது.

அந்த கூட்டத்தில், இளம்வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இந்த ஆண்டுக்கான “தகைசால் தமிழர்” விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இந்த விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான என்.சங்கரய்யா தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் 1922-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி பிறந்தவர். சுதந்திர போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டம் என போராட்டமும், சிறையுமாகவே தனது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை கழித்தவர். எளிமையின் சிகரமான என்.சங்கரய்யா மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உருவானபோது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர். தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 1967-ம் ஆண்டிலும், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977, 1980-ம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை மாணவர் சங்கம் உருவாகிய நேரத்தில், அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். சாதி கலவரங்கள், மத கலவரங்களின்போது அமைதியை உருவாக்குவதற்கு களப்பணியாற்றியவர்.

100-வது பிறந்தநாள்

1995-ல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் என்.சங்கரய்யா கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவர் அந்த பொறுப்பில் இருந்தார்.

என்.சங்கரய்யா-நவமணி தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். நான்கு பேரன்களும், மூன்று பேத்திகளும் உள்ளனர். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரான என்.சங்கரய்யா கடந்த 15-ந் தேதி தன்னுடைய 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, மு.க.ஸ்டாலின் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா
கோலி சோடா 2, கடுகு, வேட்டை நாய் படங்களில் நடித்த சுபிக்‌ஷாவை பிரபல இயக்குனர் சமூக வலைத் தளத்தில் பாராட்டி இருக்கிறார்.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
3. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருது மத்திய மந்திரி வழங்கினார்
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருதை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வழங்கினார்.
4. மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார்
மாவட்ட வாரியாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம் தென்காசியில் நாளை தொடங்குகிறார்.
5. நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது
ஆர்யா நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.