செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்


செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை 2 பேர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 29 July 2021 9:41 AM IST (Updated: 29 July 2021 9:41 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி பின்புறம் வாலிபர் ஒருவர், சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அங்கு வாலிபர் ஒருவர் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், செங்குன்றத்தை அடுத்த ஜோதி நகரைச் சேர்ந்த சண்முக பாண்டியன்(வயது 26) என்பதும், இவர் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி என்பதும் தெரியவந்தது.

2 பேர் போலீசில் சரண்

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதற்கிடையில் செங்குன்றத்தை அடுத்த நாரவாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(26), வேலு(26) ஆகிய 2 பேரும் சண்முக பாண்டியனை கொலை செய்ததாக போலீசில் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் எதற்காக சண்முக பாண்டியனை கொலை செய்தனர்?. எத்தனை பேர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டு உள்ளார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story