கொன்று புதைக்கப்பட்ட ஓவிய ஆசிரியரின் உடல் தோண்டி எடுப்பு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றதாக மனைவி வாக்குமூலம்


கொன்று புதைக்கப்பட்ட ஓவிய ஆசிரியரின் உடல் தோண்டி எடுப்பு கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றதாக மனைவி வாக்குமூலம்
x
தினத்தந்தி 29 July 2021 4:44 AM GMT (Updated: 29 July 2021 4:44 AM GMT)

சுங்குவார்சத்திரம் அருகே கொன்று புதைக்கப்பட்ட ஓவிய ஆசிரியரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்று புதைத்ததாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்தார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். அவருக்கு சோபனா (30) என்ற மனைவியும் அக்‌ஷயா (10) என்ற மகளும், கோவேஷ் (2) என்ற மகனும் உள்ளனர். அன்பழகன் அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் போது சென்னையில் இருந்து வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி முதல் அன்பழகனை காணவில்லை.

கணவர் மாயமானதாக சுங்குவார்சத்திரம் போலீசில் அவரது மனைவி சோபனா புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். விசாரணை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து சோபனா தலைமறைவானார். போலீசார் சோபனாவை தேடி கண்டு பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சோபனா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சோபனா கள்ளக்காதலன் தர்மராஜுடன் சேர்ந்து கணவர் அன்பழகனை கொலை செய்து சிவபுரம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் குழி தோண்டி புதைத்து விட்டு மாயமானதாக நாடகமாடியது தெரிய வந்தது.

உடல் தோண்டி எடுப்பு

போலீசார் சோபனா, தர்மராஜ், மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

கணவர் அன்பழகனை கொன்று புதைத்த இடத்தை சோபனா நேற்று அடையாளம் காட்டினார். ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையில் போலீசார் அன்பழகனின் உடலை தோண்டி எடுத்தனர். பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

சோபனா அளித்த வாக்குமூலம் வருமாறு:-

தான் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வந்தவர் தர்மராஜ் (வயது 32). இவர் அடிக்கடி என்னுடைய வீட்டுக்கு வருவார். உல்லாசமாக இருந்து வந்தோம். நான் அவருக்கு சித்தி முறை என்பதால் அக்கம் பாக்கத்தினருக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால்

கடந்த ஆண்டு கொரோனா கால கட்டத்தில் கணவர் அன்பழகன் வீட்டில் இருந்ததால் எங்கள் கள்ளக்காதல் விவகாரம் அவருக்கு தெரியவந்தது. என்னை கண்டித்தார். தர்மராஜை வீட்டுக்குள் அனுமதிக்க வில்லை. எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நானும் தர்மராஜும் சேர்ந்து கணவர் அன்பழகனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம். கடந்த மாதம் 24-ந்தேதி இரவு கணவர் அன்பழகன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த தர்மராஜ் மற்றும் அவரது நண்பரான திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் (23) ஆகியோர் அன்பழகனின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தினர். அவர் சத்தமிடவே அவரது வாயை நான் பொத்தி கொண்டேன். அவரது உடலை புதைத்து விட்டு எதுவுமே நடக்காதது போல் அவர் மாயமானதாக போலீசில் புகார் அளித்தேன்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சோபனா, தர்மராஜ், விக்னேஷ் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story