2,394 பேருக்கு எழுத்தறிவு தேர்வு


2,394 பேருக்கு எழுத்தறிவு தேர்வு
x
தினத்தந்தி 29 July 2021 9:15 PM IST (Updated: 29 July 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 2,394 பேருக்கு எழுத்தறிவு தேர்வு நடந்தது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார்.

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் 2,394 பேருக்கு எழுத்தறிவு தேர்வு நடந்தது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு செய்தார். 

எழுத்தறிவு தேர்வு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கூடலூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் அடிப்படை கல்வியறிவு பெறாதவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் வாசிப்பு திறன் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதையொட்டி 3 மாதங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்களில் ‘கற்போம் எழுதுவோம்’ என்ற கோட்பாட்டின்படி படிப்பறிவு இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கு எழுத்தறிவு தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. 

ஆய்வு

தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் நேற்று எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 163 மையங்களில் 2,394 பேருக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுதும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

கூடலூர் அருகே மசினகுடி, மாவனல்லா, ஆனைகட்டி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறப்பு பரிசுகள்

பின்னர் அவர் கூறும்போது, ஊட்டியில் 699 பேரும், குன்னூரில் 453 பேரும், கோத்தகிரியில் 662 பேரும், கூடலூரில் 580 பேரும் மொத்தம் 2,394 பேருக்கு சுழற்சி முறையில் 3 நாட்கள் தேர்வுகள் நடைபெறுகிறது.  சிறப்பாக தேர்வு எழுதியவர்களுக்கு வட்டார வளமையம் மூலம் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

பின்னர் ஆனைகட்டி பகுதியில் குழந்தைகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் படிப்பதை முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் பார்வையிட்டு, அவர்களிடம் பாடம் சம்பந்தமாக கேள்விகளை கேட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story