ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட சீத்தாராமன்செட்டி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட சீத்தாராமன்செட்டி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 29 July 2021 8:38 PM GMT (Updated: 29 July 2021 8:38 PM GMT)

சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட சீத்தாராமன் செட்டி சாலையில் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சேலம்
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காக்கள் சீரமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தில் பழுதான சாலைகள் சீர்படுத்தும் போது முன்னதாக அந்த வழியாக மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை, நடைமேடை ஆகியவை அமைக்கப்பட்டு அதன் பிறகு சாலை அமைக்கப்படும். அதாவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலை அமைத்தால், பின்னர் அந்த சாலையை எந்த பணிக்கும் தோண்டாத அளவில் தரமானதாக அமைக்கப்பட வேண்டும்.
வாகன போக்குவரத்துக்கு அனுமதி
அதன்படி சேலம் மாநகர் பகுதியில் ஸ்மார்ட் ரோடு என்ற பெயரில் சீத்தாராமன் செட்டி சாலை, லீ-பஜார், ஆற்றோர ரோடு, புதுத்தெரு, தம்மண்ணசெட்டிரோடு உள்ளிட்ட 12 இடங்கள் இந்த திட்டம் மூலம் சீர்படுத்த தேர்வு செய்யப்பட்டது. இதில் 7 இடங்களில் சாலை அமைக்கப்பட்டு ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. 
இந்த நிலையில் சீத்தாராமன் செட்டி சாலை சீரமைக்கும் பணி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டதால், அந்த சாலை வழியாக ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்றதை காணமுடிந்தது.

Next Story