மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு கொரோனா


மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 July 2021 9:06 PM GMT (Updated: 29 July 2021 9:06 PM GMT)

2 தவணை தடுப்பூசி செலுத்திய மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, 
2 தவணை தடுப்பூசி செலுத்திய மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு  கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2-வது அலை
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை கடந்த ஏப்ரல் மாதம் பரவத்தொடங்கியது. இந்த 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக இருந்து, அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியது. இருப்பினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவில்லை. ரெயில்வே துறையை பொறுத்தமட்டில், பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படவில்லை. பயணிகள் ரெயில்கள் முற்றிலும் இயக்கப்படவில்லை.
பாதிப்பு 
இந்த நிலையில், மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகள் குடியிருப்பை சேர்ந்த கட்டுமான பிரிவு அதிகாரிகள் குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, மதுரை அரசரடியில் உள்ள கட்டுமானப்பிரிவு அலுவலகத்தில் துணைத் தலைமை என்ஜினீயர்களாக பணியாற்றும் தம்பதியினருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு ரெயில்வே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 
இவர்கள் ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இந்த நிலையில், அவர்களது பணியாளர் மூலம் அனைவரும் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 
அதிர்ச்சி
இந்த சம்பவம் மதுரை ரெயில்வே குடியிருப்பில் இருக்கும் ரெயில்வே பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வே குடியிருப்பு பகுதியில் உரிய சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், ரெயில்கள் இயக்கத்தால் பல்வேறு தரப்பட்ட பயணிகள் மதுரை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்வதால் ரெயில்வே பணியாளர்கள் தொடர்ந்து நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 
இந்த நோய்த்தொற்று பரவலை தடுக்க ரெயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் அனைவருக்கும் தொற்று பரிசோதனை நடைமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story