சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் 14 ஆடுகள் சாவு


சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் 14 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 30 July 2021 4:06 AM IST (Updated: 30 July 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் 14 ஆடுகள் இறந்தன.

சத்தியமங்கலம்,


சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் 14 ஆடுகள் இறந்தன.

பட்டி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 52). விவசாயி. இவர் 6 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதில் சம்பங்கி மற்றும் வாழை சாகுபடி செய்துள்ளார். மேலும் வீட்டு முன்பு பட்டி அமைத்து ஏராளமான ஆடுகளை அவர் வளர்த்து வந்தார்.
சின்னதம்பி நேற்று முன்தினம் இரவு ஆடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்தார். பின்னர் வழக்கம்போல் வீட்டுக்கு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலையில் அவர் எழுந்து ஆடுகளை பார்த்தார்.
14 ஆடுகள் சாவு
அப்போது 14 ஆடுகள் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளை உற்றுப் பார்த்தார். ஆனால் அவற்றின் உடலில் எந்த விலங்குகளும் கடித்ததற்கான அடையாளம் இல்லை. ஒரே நேரத்தில் 14 ஆடுகளும் இறந்ததால் முன்விரோதத்தில் யாராவது தண்ணீரில் விஷம் கலந்து வைத்து ஆடுகளை கொன்றிருக்கலாம் என சந்தேகப்பட்டார்.
இதுகுறித்து அவர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தகவல் அறிந்து சத்தியமங்கலம் அரசு கால்நடை டாக்டரும் அங்கு சென்று, ஆடுகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அவர் ஆடுகளின் உடற்கூறுகளை  பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொண்டார்.
பகுப்பாய்வுக்கு...
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஆடுகளின் உடற்கூறுகள் பகுப்பாய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னரே அவை எப்படி இறந்தன’ என்று தெரியவரும் என கூறினார்.
சத்தியமங்கலம் அருகே மர்மமான முறையில் 14 ஆடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story