தாளவாடி அருகே பாலப்படுக்கை கிராமத்துக்கு பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
தாளவாடி அருகே பாலப்படுக்கை கிராமத்துக்கு பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தாளவாடி,
தாளவாடி அருகே பாலப்படுக்கை கிராமத்துக்கு பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
தாளவாடியை அடுத்த இக்களூர் ஊராட்சிக்கு உள்பட்டது பாலப்படுக்கை கிராமம். இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று பகல் 11.15 மணி அளவில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் ரோட்டில் உள்ள சிக்கள்ளி அருகே ஒன்று திரண்டனர்.
பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி உடனே தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
4 கி.மீ. தூரம்
அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், அரசு போக்குவரத்துகழக மேற்பார்வையாளர் கண்ணன் ஆகியோர் அங்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘பாலப்படுக்கை கிராம மக்கள் தாளவாடி, சத்தியமங்கலம் செல்ல வேண்டுமானால் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இக்களூர் கிராமத்துக்கு வந்து பஸ்சில் செல்ல வேண்டும்.
போக்குவரத்து பாதிப்பு
எனவே பாலப்படுக்கை கிராமத்துக்கு காலை, மதியம், மாலை என 3 வேளையும் பஸ் இயக்கக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஸ் வசதி இல்லாததால் ரேஷன், மளிகை பொருட்கள் வாங்க இக்களூருக்கு தினமும் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கிறோம். பின்னர் அங்கிருந்து பாலப்படுக்கைக்கு ரேஷன், மளிகை பொருட்களை தலையில் சுமந்தபடி வரவேண்டிய நிலைமை உள்ளது. எனவே உடனே பாலப்படுக்கை கிராமத்துக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘உங்கள் கிராமத்துக்குள் பஸ் சென்று திரும்ப இட வசதி உள்ளதா? என ஆய்வுசெய்து பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று கொண்ட பொதுமக்கள் அரசு பஸ்சை விடுவித்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தாளவாடி-தலமலை ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story