நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகத்தில் கார் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டது மாமல்லபுரம் போலீசார் தகவல்


நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகத்தில் கார் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டது மாமல்லபுரம் போலீசார் தகவல்
x
தினத்தந்தி 30 July 2021 2:27 AM GMT (Updated: 30 July 2021 2:27 AM GMT)

நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகத்தில் கார் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டதாக மாமல்லபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரம்,

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை மாமல்லபுரம் வந்து விட்டு சென்னை திரும்பும்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு என்ற இடத்தில் அதிவேகத்தில் கார் ஓட்டி செல்லும்போது கார் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துள்ளானது.

இந்த விபத்தில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த அவரது தோழி வள்ளிசெட்டி பவனி (28) தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சென்னை வந்து தங்கினார்.

பின்சீட்டில் அமர்ந்து வந்த அவரது நண்பர்கள் சையத் (28), அமீர் (29) இருவரும் காயத்துடன் உயிர் தப்பினார்கள். தற்போது யாஷிகா ஆனந்த் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும், லேசான காயமடைந்த சையத், அமீர் இருவரும் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீட் பெல்ட் அணியாததால்

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சையத், அமீர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் இருவரும் சீட் பெல்ட் அணிந்து பின் சீட்டில் அமர்ந்து பயணம் செய்ததால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்தனர். மேலும் யாஷிகா ஆனந்த் சீட் பெல்ட் ஆணியாமல் அதிவேகமாக காரை ஓட்டி வந்தார். வள்ளிசெட்டி பவனியும் சீட்பெல்ட் அணியவில்லை என்று மாமல்லபுரம் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஸ்பத்திரியில் இருந்து உடல்நலம் தேறி வீடு திரும்பிய உடன் அதிவேகத்தில் கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்து ஒரிஜினல் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story