சிறப்பு தேர்வு முடிவு வெளியிடும் வரை மாணவர் சேர்க்கைக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


சிறப்பு தேர்வு முடிவு வெளியிடும் வரை மாணவர் சேர்க்கைக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 July 2021 8:39 AM IST (Updated: 30 July 2021 8:39 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு தேர்வு முடிவு வெளியிடும் வரை மாணவர் சேர்க்கைக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ்-2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூடுதல் மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்களுக்கு பின்னர் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர், ‘‘கற்பனையாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு உரிமை இல்லை. அதேநேரம், மாணவர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்கள் இந்த ஐகோர்ட்டை அணுகலாம்’’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story