‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் இந்தியாவில் யாரை வேவு பார்த்தீர்கள்? மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி


‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் இந்தியாவில் யாரை வேவு பார்த்தீர்கள்? மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 31 July 2021 4:20 AM GMT (Updated: 31 July 2021 4:20 AM GMT)

‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் இந்தியாவில் யாரை வேவு பார்த்தீர்கள்? என்பதை நாட்டுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டும் என டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார்.

சென்னை திரும்பினர்
டெல்லியில் இருந்து நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவா் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. மகளிர் அணி செயலாளா் கனிமொழி எம்.பி., தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. ஆகியோர் சென்னை வந்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:-
இஸ்ரேல் நிறுவனம் தயாரித்து உள்ள ‘பெகாசஸ்’ எனும் உளவு பார்க்கும் மென்பொருளை பல நாடுகளுக்கு விற்று உள்ளனர். இதனை வாங்கிய நாட்டினர் தங்களுடைய அரசியல் எதிரிகள், நீதித்துறையினர், பத்திரிகையாளர் உள்பட சிலரை வேவு பார்க்கின்றனர். இது தவறு என்று கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறோம்.

யாரை வேவு பார்த்தீர்கள்?
பெகாசஸ் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கேட்கிறோம். இது தேச நலனுக்கு எதிரானது. தனி நபரின் படுக்கை அறையில் என்ன நடக்கிறது? என்பதையும் இதன்மூலம் வேவு பார்க்க முடியும். உரிமைகள், நாட்டின் சுதந்திரம் பறிப்போகிறது. தேசிய நலனுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் விவாதிக்க வேண்டும் என கேட்கிறோம்.ஆனால் மத்திய அரசு கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி கொண்டுதான் இருக்கிறோம். இந்தியாவுக்கு வேவு செயலியை தந்து இருப்பதாக சான்பிரான்சிஸ்கோவில் அபிடவிட் பதிவு செய்து உள்ளனர். இதன்மூலம் 
இந்தியாவில் பயங்கரவாதிகளை உளவு பார்த்தீர்களா? அரசியல்வாதிகளை உளவு பார்த்தீர்களா?. யாரை வேவு பார்த்தீர்கள்? என்பதை நாட்டுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சொல்ல வேண்டும்.

மேகதாது அணை
மேகதாது அணை கட்டுவதற்கு வாய்ப்பே கிடையாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவது வாடிக்கை. நாங்கள் ஆளும்கட்சியாக இருக்கிறோம். எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தட்டும். ஜனநாயகத்தில் உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story