வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் வெள்ள மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு எதிர்பாராத மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்க நேர்ந்தால் எவ்வாறு தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில் அருகே உள்ள குளத்தில் நடைபெற்ற ஒத்திகை பயிற்சிக்கு திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், திருவள்ளூர் உதவி தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலைய அலுவலர் இளங்கோவன், முன்னணி தீயணைப்பு அலுவலர்கள் ஞானவேல், சிவக்குமார், திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் பெருமாள் மற்றும் மீட்புக்குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கோவில் குளத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை கயிறு மூலம் மீட்டு வருதல், ரப்பர் படகு, டியூப் மூலமும், பிளாஸ்டிக் குடம், 25 லிட்டர் குடிநீர் கேன், தெர்மாகோல் போன்றவற்றின் மூலம் எவ்வாறு மீட்பது என்பது குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story