தொழில் போட்டியில் வாலிபர் படுகொலை


தொழில் போட்டியில் வாலிபர் படுகொலை
x
தினத்தந்தி 31 July 2021 11:21 PM IST (Updated: 31 July 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே தொழில் போட்டியில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே தொழில் போட்டியில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழில் போட்டி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள செலுகை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன் தென்னரசு(வயது 29). பக்கத்து கிராமமான சிவனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர்கள் இருவரும் பொக்லைன் எந்திரத்தை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை செலுகையில் தென்னரசு, அவரது அண்ணன் காளிதாஸ், நண்பர்கள் இளங்குளம் கணேசன், குருப்புலி சுரேஷ் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மணிகண்டன் வந்தார். திடீரென இருதரப்பினரும் தொழில் போட்டியால் வாக்குவாதம் செய்து கொண்டனர்.

குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தென்னரசை குத்தினார்.
இதை பார்த்த அவரது அண்ணன், நண்பர்கள் அவரை தடுக்க முயன்றனர். இதில் அவர்களையும் சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் கத்திக்குத்துப்பட்ட தென்னரசு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மற்ற 3 பேரும் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசார் விரைந்தனர்

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழில் போட்டியால் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி திருவாடா னை அரசு மருத்துவமனை முன்பு  வாலிபரின் உறவினர் கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.

Related Tags :
Next Story