ஆவடி அருகே ரூ.4 லட்சம் கடனுக்காக வியாபாரி மகனை காரில் கடத்தி அரிவாளால் வெட்டிய கந்துவட்டி கும்பல்; 2 பேர் கைது
ரூ.4 லட்சம் கடனை வியாபாரி திருப்பி கொடுக்காததால் ஆத்திரமடைந்து அவரது மகனை காரில் கடத்தி அரிவாளால் வெட்டிய கந்துவட்டி கும்பலை சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர்.
மகன் கடத்தல்
ஆவடி அடுத்த கொள்ளுமேடு காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணி. பாய் வியாபாரி. இவர் மதுரவாயலை சேர்ந்த சண்முகம் என்பவரிடம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலை மேம்படுத்த ரூ.4 லட்சம் கடனாக வாங்கி உள்ளார்.இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் வட்டி செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மணியின் மகன் சேகர் (வயது 21). இவர் கேரளாவில் ஒரு கல்லூரியில் பி.ஏ., 2-ம்ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி விடுமுறை விடப்பட்டு இருப்பதால் கொள்ளுமேடு பகுதியில் உள்ள தனது
வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.இந்நிலையில் கடந்த 27-ந் தேதி அதிகாலை காரில் வந்த சண்முகம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டில் புகுந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சேகரை காரில் கடத்தி சென்று பூந்தமல்லி அடுத்த குமணஞ்சாவடி அருகே உள்ள குடோனில் அடைத்து வைத்தனர்.பின்னர், அங்கு சேகரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி அவரது தந்தை தர வேண்டிய பாக்கி ரூ.4 லட்சம் பணத்தை கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அவரை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளனர்.
2 பேர் கைது
பின்னர் அந்த கும்பல் சேகரின் தந்தை மணிக்கு போன் செய்து, பணத்தை கொடுத்து மகனை மீட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன மணி உறவினரான டேவிட் என்பவரிடம் ரூ.4 லட்சத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் ரத்த காயத்துடன் சேகரை அவரது வீட்டில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தலையில் வெட்டுகாயம் அடைந்த சேகர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தலையில் 13 தையல் போடப்பட்டது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் மணி புகார் கொடுத்தார். இதுதொடர்பாக ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி உத்தரவின் பேரில், ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தின் மகன் பாஸ்கர் (வயது 34) மற்றும் அவரது உறவினரான ராஜேந்திரன் (45) ஆகிய இருவரையும் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சண்முகம், அழகுவேல், பாண்டிதுரை, பால்ராஜ், ஐயப்பன், குமார், பன்னீர்செல்வம், பாண்டிகலா உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story