கொளப்பாக்கத்தில் கணவன், மனைவி கொலை வழக்கில் 2 பேர் கைது; நகைக்காக கொன்றதாக போலீசில் வாக்குமூலம்
கொளப்பாக்கத்தில் கணவன், மனைவி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யபப்பட்ட குற்றவாளிகள் நகைக்காக கொன்றதாக போலீசில் தெரிவித்தனர்.
கணவன், மனைவி கொலை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாம்சன் தினகரன் (வயது 65), இவரது 2-வது மனைவி ஜெனட் (52). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருக்கும் போது கடந்த மாதம் 16-ந்தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு அவர்களது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் உடல்கள் வீசப்பட்டிருந்தது. கொலையாளிகள் அவர்களது வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தார். கணவன், மனைவி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 4 தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் கொலை நடந்து 15 நாட்கள் கழித்து நேற்று காலை இந்த கொலையில் தொடர்புடைய கொளப்பாக்கம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதேபோல கொளப்பாக்கம் அன்னை தெரசா தெருவை சேர்ந்த மற்றொரு கொலையாளி சுந்தர் (வயது 32) என்பவரை காரணைப்புதுச்சேரி அருகே நேற்று காலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
நகைக்காக கொலை செய்தோம்
அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் கூறியதாவது:-
சாம்சன் தினகரன், ஜெனட் தம்பதி நீண்ட காலமாக தனிமையில் வசித்து வந்தனர். இதனால் அவர்களை கொலை செய்து வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருவரையும், கடந்த 16-ம் தேதி கொலை செய்து குடிநீர் தொட்டியில் வீசி விட்டு 27 பவுன் நகைகளை கொள்ளையடித்தோம் என்று வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசில் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து 27 பவுன் நகைகளை போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story