இன்று முதல் ஒரு வாரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் கலெக்டர்களுக்கு இறையன்பு உத்தரவு


இன்று முதல் ஒரு வாரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் கலெக்டர்களுக்கு இறையன்பு உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2021 7:30 PM IST (Updated: 1 Aug 2021 7:30 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்காக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூறினார். இதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு வாரம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இதுதொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, மாவட்டங்களில் ஒரு வாரம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 1-ந்தேதி (இன்று) முதல் 7-ந்தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முககவசம்-சமூக இடைவெளி

அதன் விவரம் வருமாறு:-

1-ந்தேதியன்று, துண்டுபிரசுரங்கள், சிற்றேடுகள் வழங்கியும், பலூன்களை பறக்கவிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதேபோல சமூக ஊடகங்களான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு பதிவுகளை பதிவிடவேண்டும். விழிப்புணர்வு நிகழ்வுகளை உள்ளூர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி அல்லது நேரடியாக ‘கவரஜே்' செய்ய ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

2-ந்தேதியன்று, பெரிய அளவில் கை கழுவுதல் தொடர்பான நிகழ்வுகளை நடத்த வேண்டும். பஸ் நிறுத்தம், ரெயில்நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கூடும் இடங்களில் உள்ளிட்ட பொது இடங்களில் முககவசத்தின் பயன்பாடு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கபசுர குடிநீர்

3-ந்தேதியன்று, வியாபாரிகள் சங்கத்தினருடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ‘ஸ்பான்சர்' செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உள்ளூர் நிகழ்வுகளை நடத்த வேண்டும்.

4-ந்தேதியன்று, சுங்கச்சாவடிகளில் முகாமிட்டு, நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். குறும்பட போட்டிகள் நடத்தவேண்டும். இந்திய மருத்துவ துறையின் நோய் எதிர்ப்பு சக்திகளான கபசுர குடிநீர், அமுக்காரா மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வினியோகிக்க வேண்டும்.

வினாடி-வினா போட்டி

5-ந்தேதியன்று, இணையவழியில் ‘போஸ்டர்'கள் வடிவமைக்கும் போட்டி, ஓவியப்போட்டி, கொரோனா விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டிகளை நடத்த வேண்டும்.

6-ந்தேதியன்று, மாணவர்கள் இடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த இணையவழியில் வினாடி-வினா போட்டி நடத்த வேண்டும். எப்.எம். சேனல்களின் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக ‘மீம்ஸ்'கள் எழுத ஊக்குவிக்க வேண்டும். உள்ளூர் கலைஞர்கள் மூலம் தெருக்கூத்து, நகைச்சுவை நாடகம் நடத்த வேண்டும்.

விதிமுறைகளை மீறக்கூடாது

7-ந்தேதியன்று, மண்டலம், வார்டுகள், பஞ்சாயத்து மற்றும் கிராமங்களில், தடுப்பூசி போடுவதில் 100 சதவீத இலக்கை எட்டுவதற்கு மாவட்ட அளவிலான வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

எனவே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையிலான ஒருவார காலம் மேற்கண்டவாறு பட்டியலிட்டப்படி செய்வதற்கான ஏற்பாடுகளை கலெக்டர்கள் மேற்கொள்ளவேண்டும். விழிப்புணர்வு நிகழ்வுகளில் கூட்டமாகவோ அல்லது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விதிமுறைகளை மீறவோ கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story