பெரியபாளையம் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும்


பெரியபாளையம் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 1 Aug 2021 2:54 PM GMT (Updated: 1 Aug 2021 2:54 PM GMT)

பெரியபாளையம் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் பெரியபாளையம் ஓம் ஸ்ரீ பவானி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்குச் செல்வதற்காக எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியனில் 683.5 சதுர மீட்டர் வழி உள்ளது. கோவிலின் பயன்பாட்டில் உள்ள இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று ஏற்கனவே செங்கல்பட்டு சப்-கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபுறமும் சிலர் சட்டவிரோதமாக கடைகள் கட்டியுள்ளனர். மேலும் இந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று உரிமை கோரி எல்லாபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆணையர் அறிவிப்பு பலகை வைத்துள்ளார். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் நிலத்தை மீட்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, ஊத்துக்கோட்டை தாசில்தார் ஆகியோர் உரிய உதவிகளை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அதிகாரிகள் 2 வாரங்களில் அகற்றி, வருகிற 12-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Next Story