தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனைத்து அரசுத்துறைகளிடம் இருந்து இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதி


தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனைத்து அரசுத்துறைகளிடம் இருந்து இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதி
x
தினத்தந்தி 1 Aug 2021 9:19 PM IST (Updated: 1 Aug 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனைத்து அரசுத்துறைகளிடம் இருந்து இணைய தளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச்செயலகத்தில், மனிதவள மேலாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம், அவர்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். போட்டி தேர்வுகளில் நமது மாநில மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு வகைப்பட்ட சிறப்பு பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்க வேண்டும்.

இணையதளம் மூலம் தகவல்

தமிழ்நாட்டு மாணவர்களிடையே, மாநில மற்றும் மத்திய அரசு பணிகள் தொடர்பான போட்டி தேர்வுகள், தகுதிகள் மற்றும் தேவையான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பகங்கள் மூலம் அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து துறைகளிடம் இருந்து இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலை உயர்த்த வேண்டும். தமிழக இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கும், அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பவானிசாகரில் உள்ள அடிப்படை பயிற்சி மையத்தால் அரசு பணியாளர்களுக்கான பயிற்சியை காணொலி காட்சி மூலமாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றவர்கள்

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன், மனிதவள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில், பொதுத்துறை சார்பில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ரூ.70.75 லட்சம் செலவிலும், மதுரை மாவட்டம், மதுரை ரெயில் நிலையம் அருகில் ரூ.86.35 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மைய கட்டிடங்களை காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கட்டிடம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story