சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53). இவர் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது குடும்பத்தினர் மட்டும் செந்தமிழ் நகரில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியனின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் ராணிப்பேட்டைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கடந்த மாத இறுதியில் மீண்டும் ஊருக்கு வந்தனர். அப்போது யாரோ சில திருடர்கள் அவர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து 2 பவுன் நகைகள், 12 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.