2ம் வகுப்பு பெட்டிக்கு பதிலாக 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைப்பு
மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிக்கு பதிலாக 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது.
மதுரை, ஆக
மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிக்கு பதிலாக 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது.
பாண்டியன் எக்ஸ்பிரஸ்
தென்னக ரெயில்வேயில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுகிறது. ஏற்கனவே, கன்னியாகுமரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.எச்.பி. வகை பெட்டிகள் இணைக்கப்பட்ட போது, குறைந்த எண்ணிக்கையில் இணைக்கப்பட்டன.
ஏற்கனவே சாதாரண வகை பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தபோது, பிளாட்பாரங்களின் நீளம் குறைவாக இருப்பதால் குறைவான பெட்டிகள் இணைக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, அங்கு பிளாட்பாரங்களின் நீளம் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
குளிரூட்டப்பட்ட பெட்டி
இதற்கிடையே, மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு 2-ம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரசில் வருகிற 23-ந்தேதி முதலும், சென்னையில் இருந்து மதுரை வரும் ரெயிலில் வருகிற 26-ந் தேதி முதலும் இந்த பெட்டி இணைக்கப்படுகிறது.
சாமானியர்களுக்கு எதிராக..
அதன்படி, இந்த ரெயில்களில் இனிமேல் ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 3 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தூங்கும்வசதி பெட்டியின் கட்டணத்தை விட குளிரூட்டப்பட்ட பெட்டியில் கட்டணம் அதிகம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுவதில்லை. முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, சாமானியர்கள் யாரும் ரெயில் பயணத்தை விரும்ப கூடாது என்பதற்காக இதுபோன்ற மாற்றம் கொண்டுவரப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
Related Tags :
Next Story