திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி சென்று மனைவியுடன் பா.ம.க. பிரமுகர் கொன்று புதைப்பு


திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி சென்று மனைவியுடன் பா.ம.க. பிரமுகர் கொன்று புதைப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 4:28 PM GMT (Updated: 3 Aug 2021 4:28 PM GMT)

திருத்தணியை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் மற்றும் அவரது மனைவியை நகை, பணத்துக்காக ஆந்திராவுக்கு கடத்தி சென்ற மர்ம ஆசாமிகள் கொன்று புதைத்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாருதி தெருவில் வசித்து வந்தவர் சஞ்சீவி ரெட்டி. (வயது 68). இவர் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். இவர் பா.ம.க. பிரமுகர் ஆவார். இவரது முதல் மனைவி சரஸ்வதி 25 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

அதன்பிறகு மாலா (60) என்பவரை 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் அவரும் மனைவியும் மாயமானதாக அவரது தம்பி பாலு (55) என்பவர் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் மாருதி தெருவில் உள்ள சஞ்சீவி ரெட்டியின் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சோதனை செய்த போது, வீட்டில் இருந்த பணம், நகை, முக்கிய ஆவணங்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.

கொலை

அதைத்தொடர்ந்து தம்பதியை யாரேனும் நகை-பணத்துக்காக கடத்தி சென்றார்களா? என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். இதனையடுத்து போலீசார் அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவருடன் பேசியவர்களை கண்காணிக்க தொடங்கினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வந்த தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில், அவரது உறவினர் உள்பட 3 பேரிடம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று சஞ்சீவி ரெட்டியும் அவரது மனைவி மாலாவும் ஆந்திர மாநிலம் புத்தூரில் இருந்து கார்வேட்டி நகரம் செல்லும் வழியில் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

நகைகள் கொள்ளை

இதையடுத்து புத்தூர் போலீசார் அந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பா.ம.க. பிரமுகர் வீட்டில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் பணம், 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

திருத்தணியில் தம்பதியர் ஆந்திராவிற்கு கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகை, பணத்துக்காக அவர்களை கொன்று புதைத்தார்களா? என விரிவான விசாரணையில் திருத்தணி போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story