பஸ் ஏற நின்ற பெண்ணை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற பயங்கரம்


பஸ் ஏற நின்ற பெண்ணை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற பயங்கரம்
x
தினத்தந்தி 3 Aug 2021 6:21 PM GMT (Updated: 3 Aug 2021 6:21 PM GMT)

பஸ் ஏற நின்றிருந்த பெண்ணை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தேவகோட்டை,

பஸ் ஏற நின்றிருந்த பெண்ணை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கம்யூனிஸ்டு பெண் நிர்வாகி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள தச்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பெங்களூருவில் வேைல செய்து வருகிறார். இவருடைய மனைவி மீனாட்சி(வயது 47). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் மாதர் சங்க நிர்வாகியாக இருந்தவர். தற்போது அந்த சங்கத்தில் இருந்து விலகி இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உண்டு.
 செல்வராஜூவுக்கும், அவருடைய தம்பி சேகருக்கும் வீட்டு மனை விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் கொடுத்து வந்தனர். போலீசார் இருதரப்பினரையும் அடிக்கடி கூப்பிட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.சேகரின் மகன் பாலா(19). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அடிக்கடி பெரியப்பா வீட்டுக்கு சென்று சொத்து தொடர்பாக தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மீனாட்சி தச்சவயலில் இருந்து தேவகோட்டை செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் பாலா வந்தார்.
இதை பார்த்து சுதாரித்து மீனாட்சி அங்கிருந்து அருகில் உள்ள தெரு வழியாக ஓடினார். அவரை பாலாவும் அரிவாளுடன் விரட்டினார். தெருவில் உள்ள சித்திரவேல் என்பவரது வீட்டுக்குள் அவர் ஓடிச் சென்று தஞ்சம் அடைந்தார். பின்னாலே ஓடி வந்த பாலா, பெரியம்மா மீனாட்சியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.பின்னர் பாலா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
.
போலீசில் சரண்

இது குறித்து அக்கம், பக்கத்தினர் தேவகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். துணை சூப்பிரண்டு ரமேஷ், தேவகோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட மீனாட்சி உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தேவகோட்டை போலீஸ் நிலையத்தில் பாலா சரண் அடைந்தார். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை போலீசார் கைப்பற்றினர். பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story