பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி வழக்கு
பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் தென்னக ரெயில்வே பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,ஆக
பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் தென்னக ரெயில்வே பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரெயில்சேவை
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரைச் சேர்ந்த ஜீவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் போக்குவரத்து வசதிக்காக ரெயில் சேவையையே நம்பி உள்ளனர். மேலும் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும் ரெயில் சேவையை முழுமையாக நம்பி உள்ளனர்.
திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால் நகரங்களுக்கு செல்லும் பாசஞ்சர் ரெயில் பூதலூர், தொண்டைமான்பட்டி, திருவெறும்பூர், அம்மாபேட்டை, பாபநாசம், சுவாமிமலை உள்பட பல கிராமங்கள் வழியாக பயணித்தன.
தற்போது இந்த பாசஞ்சர் ரெயில்கள் பலவற்றை முன்பதிவு ரெயில்களாக மாற்றவும், முன்பதிவில்லாத பெட்டிகளை நீக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரியவருகிறது. இதை நடைமுறைப்படுத்தினால் ரெயில் சேவையை மட்டுமே நம்பி உள்ள டெல்டா மாவட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள்.
22 ரெயில்கள்
எனவே பாசஞ்சர் ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும், இதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே திருச்சி முதல் மயிலாடுதுறை வரையிலான 22 பாசஞ்சர் ரெயில்களையும் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு இயக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், தற்போது இந்த வழித்தடத்தில் ஒரு பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து பதில் மனுவை தென்னக ரெயில்வே தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story