விடுதலை போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு தலைவர்கள் புகழாரம்
விடுதலை போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு தலைவர்கள் புகழாரம் செய்தனர்.
அறச்சலூர்
விடுதலை போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு தலைவர்கள் புகழாரம் செய்தனர்.
புகழாரம்
ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் நேற்று தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நடந்தது.
விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டு தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் ஜி.கே.மணி மாலை அணிவித்தார்.
பாடப்புத்தகத்தில்...
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் தீரன் சின்னமலை வரலாறு இடம் பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் மத்திய அரசும் அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது.
கடந்த 14 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேளாண்மைக்காக தனி நிழல் பட்ஜெட் போட்டு வருகிறோம். முதல் முறையாக தமிழக அரசு வேளாண்மைக்காக தனி பட்ஜெட் கொண்டு வருவதுபாராட்டத்தக்கது.
ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டபம் கட்ட வேண்டும், அரசு விழா கொண்டாட வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தது பா.ம.க. அதன்படி விழா கொண்டாடப்படுகிறது. அதுபோல் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாற்றையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
மறைக்கப்பட்ட தலைவர்கள்
தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் தீரன் சின்னமலையின் புகழை கட்சியினர் மத்தியில் பேசி புகழாரம் சூட்டினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
இந்தியாவில் மறைக்கப்பட்ட தலைவர்களின் புகழை பா.ஜனதா மீட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 1967-ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த கட்சிகள் அவர்கள் தலைவர்கள் என்று காட்டுபவர்களையே நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எந்த தலைவர்களின் பெயர் உள்ளது என்பதை படித்து பார்த்தால் தெரியும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தலைவர்கள் என்று அவர்கள் வெளிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் மறைக்கப்பட்ட தீரன் சின்னமலை, பொல்லான், குணாளன் ஆகியோரை பா.ஜனதா வெளியே கொண்டு வருகிறது.
நீட் தேர்வு
நீட் தேர்வில் 2020-ம் ஆண்டு தமிழகத்தில் அதிக மாணவர்கள் வெற்றி பெற்று உள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டுகளில் இருந்த குறைபாடுகளை நீக்கி தமிழக அரசு சிறப்பாக தேர்வை நடத்தியது. இதனால் 7.5 சதவீதம் ஒதுக்கீடு இல்லாமல் பார்த்தாலும் மற்ற ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் அதுவும் சமூக நீதி அடிப்படையையும் தாண்டி அனைத்து பிரிவினரும் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்து உள்ளனர். நீட் தேர்வு எழுத மாணவ-மாணவிகள் ஒரு ஆண்டாவது கடுமையாக தயாராக வேண்டும். ஆனால் தற்போதைய தமிழக சுகாதார அமைச்சர் 3 மாதங்களில் தேர்வை நடத்திவிட முடியும் என்கிறார்.
பிரதமரின் சாதனை
மேகதாது அணை தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கடிதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன்.
இவ்வாறு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அவருடன் டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
இந்து மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்தார்.
Related Tags :
Next Story