கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்- பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 3 Aug 2021 9:55 PM GMT (Updated: 3 Aug 2021 9:55 PM GMT)

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஈரோடு
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கொரோனா பரவல்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.சி.ஆர்.கோபால், தா.ப.பரமேஸ்வரன், மாநில துணைத்தலைவர்கள் எஸ்.எல்.பரமசிவம், எம்.பி.வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வரும் மக்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கேரளா சென்று திரும்புபவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் பயணிகளை அரசு நிர்ணயித்துள்ள எண்ணிக்கையில் மட்டும் ஏற்றி செல்ல அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இடஒதுக்கீடு
சீர்மரபினர் சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
116 சமூகங்களுக்கு எம்.பி.சி. பிரிவில் வழங்கப்பட்டு வந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டை எந்த புள்ளி விவரங்களும் இல்லாமலும், பிற சமூகங்களை கலந்தாலோசிக்காமல் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கி உள்ளது. இதனால் 115 சமுதாயங்களை சேர்ந்த மக்களின் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் குழந்தைகளை அரசு தான் வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
பஸ் வசதி
ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் பால் பொருள் தயாரிப்பு நிறுவனத்தால் சுற்றுப்புற சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
பவானி அருகே உள்ள கன்னடிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் கன்னடிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தி வரும் பொதுப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்துள்ளார். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி எங்களுக்கு சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
ஈரோடு சாஸ்திரிநகர் திருப்பதி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு சாஸ்திரி நகர் பகுதிக்கு 3-ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் வந்து கொண்டு இருக்கிறது. இந்த பஸ்சை வாய்க்கால் மேடு, முத்துசாமி காலனி, திருப்பதி கார்டன் வரை வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

Next Story