ஈரோட்டில், நிதி நிறுவன அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
ஈரோட்டில், நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு
ஈரோட்டில், நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நிதி நிறுவன அதிபர் கொலை
ஈரோடு கருங்கல்பாளையம் வி.ஜி.பி நகர் பகுதியை சேர்ந்தவர் மதி என்கிற மதிவாணன் (வயது 40). நிதி நிறுவன அதிபர். மேலும் இவர் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ரோட்டில் உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு மதிவாணன் இ-சேவை மையத்தின் முன்பு நாற்காலி போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மதிவாணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனிப்படை அமைப்பு
மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க, ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், ஜெயமுருகன், விஜயா, கோபி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மதிவாணன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story