கள்ளக்காதல் விவகாரம்: பாட்டிலால் குத்தி வியாபாரி கொலை


கள்ளக்காதல் விவகாரம்: பாட்டிலால் குத்தி வியாபாரி கொலை
x
தினத்தந்தி 4 Aug 2021 11:03 AM IST (Updated: 4 Aug 2021 11:03 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் விவகாரத்தில் பாட்டிலால் குத்தி வியாபாரி கொலை செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த சதாவரம் காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி ஷீலா (வயது 37) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஷீலாவுக்கும் காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த கோணி வியாபாரி கனகராஜ் (47) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

வரதன் பலமுறை எடுத்துக்கூறியும் ஷீலா கள்ளக்காதலை விடுவதாக இல்லை, இதனால் வரதன் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தேனம்பாக்கம் பகுதியில் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த ஷீலாவின் தம்பி ராஜீவ்காந்தி என்ற டோரி (30), தனது நண்பரான உதயமாங்குளத்தை சேர்ந்த உதயகுமார் என்ற உதயா (31) என்பவருடன் சேர்ந்து சகோதரியின் கள்ளக்காதலன் கனகராஜை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராஜிவ்காந்தி, உதயா, கனகராஜ் ஆகியோர் ஒன்றாக மது குடித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜிவ்காந்தி நண்பர் உதயாவுடன் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து கனகராஜை கழுத்து உள்ளிட்ட பல பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அருகில் இருந்த அம்மிக்கல்லால் கனகராஜ் முகத்தை சிதைத்து விட்டு தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஓரிக்கை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த ராஜீவ்காந்தி, உதயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story