வாலாஜாபாத் அருகே கல்குவாரி லாரிகளை மாற்று பாதையில் இயக்கக்கோரி கிராம மக்கள் மறியல்
வாலாஜாபாத் அருகே கல்குவாரி லாரிகளை மாற்று பாதையில் இயக்கக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட காவாந்தண்டலம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாகரல் பகுதியில் இயங்கிவரும் கல்குவாரிகளில் இருந்து சென்னை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், செங்கல்பட்டு, உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்டுமான பணிகளுக்கான கருங்கல் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் மூலம் காவாந்தண்டலம் கிராம சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக லாரிகள் சென்று வருவதால் கிராமத்தில் உள்ள வீடுகள் முழுவதும் தூசி படிந்து காற்று மாசடைகிறது.
அதிக எடையுடன் கனரக லாரிகள் செல்வதால் சாலைகளில் பழுது ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவதாகவும், அதனால் கனரக லாரிகளை மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த காவாந்தண்டலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காவாந்தண்டலம் சாலை வழியாக சென்ற லாரிகளை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்களின் சாலை மறியல் போராட்டம் குறித்து அறிந்து காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் மாகரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கனரக லாரிகளை மாற்றுப்பாதையில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் சாலையின் இருபுறமும் நின்றன. இதனால் காவாந்தண்டலம் - வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story