சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு


சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள்தண்டனை சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2021 5:07 PM GMT (Updated: 4 Aug 2021 5:07 PM GMT)

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணவேணி (வயது 39), இளங்கோவன் (37). இவர்கள் இருவரும், 18 வயதுக்கு கீழ் உள்ள ஒரு சிறுமியை கடத்தி, வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இதன்பின்பு, அந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் மற்றும் மின்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோரிடம் விற்பனை செய்துள்ளனர். அவர்கள் இருவரும், அந்த சிறுமியிடம் பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றவாளிகளான கிருஷ்ணவேணி, இளங்கோவன் ஆகியோருக்கு சிறுமியை கடத்திய குற்றச்சாட்டுக்கு ஒரு ஆயுள் தண்டனை, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டுக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

மேலும் நவாஸ், ஸ்டாலின் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

Next Story