திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்தது


திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 Aug 2021 6:12 PM GMT (Updated: 4 Aug 2021 6:12 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திம்பம் மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சரக்கு வேன்
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தாளவாடியில் இருந்து கோவைக்கு வெங்காய பாரம் ஏற்றி கொண்டு சரக்கு வேன் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 48) என்பவர் ஓட்டினார். அதிகாலை 3 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது வேன் கட்டுப்பாட்டை இழந்தது.
பள்ளத்தில் பாய்ந்தது
அப்போது திடீரென ரோட்டோரம் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த வெங்காய மூட்டைகள் சிதறி கீேழ விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய டிரைவர் ஆனந்தராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் விழுந்து கிடந்த சரக்கு வேன் மீட்கப்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழுதாகி நின்ற லாரி
இதேபோல் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மரம் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி மதியம் 12 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்றது. இதனால் திம்பம் மலைப்பாதை வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. அதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் சென்றன. லாரி பழுதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறுகிய வளைவுகளை கொண்டுள்ளதால் மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. மேலும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. எனவே திம்பம் மலைப்பாதை ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story