தாளவாடி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன,
தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47). இவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் வாழை பயிர் சாகுபடி செய்துள்ளார். அதேபோல் தென்னை மரங்களும் வளர்த்துவருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 6 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவை வனப்பகுதியையொட்டி உள்ள மகேசின் வாழை தோட்டத்துக்குள் புகுந்தன. அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழை குருத்துகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்த தொடங்கின.
சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகேஷ் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு யானைகள் நின்று கொண்டிருந்தன. உடனே இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் அருகே உள்ள தென்னந்தோப்புக்குள் ஓடியது. அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை மரங்களையும் மிதித்து சேதப்படுத்தின. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் சென்றன.
யானைகளால் 1 ஏக்கர் பரப்பளவு உள்ள வாழை, 50 தென்னை மரங்கள் நாசமானது. மேலும் இதுபற்றி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story